மிளகு கற்பம்.


மிளகு கற்பம்.

கற்ப வகைகளைப் பற்றி ஏற்கனவே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். எளிய கற்ப வகைகள் ஏதுமிருந்தால் பகிர்ந்திட பலரும் வேண்டியிருந்தனர். தேரையர் அருளிய “தேரையர் காப்பியம்” என்னும் நூலில் காணக் கிடைத்த எளிய கற்பமான “மிளகு கற்பம்”

மரிசமொவ் வொன்றொரு வார மட்ட திக
வரிசையாய்த் தினமுமோர் மண்டலங் காலமே
யுண்டிடு தேசுட னுரமிகு பசியுங்
கொண்டிடு மதன்பொடி குழைத்து நெய்யுடனே
யுண்டிடத் தொனிதரு மோதுமிப் பொருளொடக்
காரமுங் குழைத்துணக் கடும்பசி யழலுறும்
பாரிய நோய்களும் பறக்கும தொன்றையுங்
குடிநீ ரட்டுணக் குலவுமுத் தோடமுங்
கொடும்பிணி யாவும் குடிகெட் டோடுமே
- தேரையர்.

இந்த வகை கற்ப முறைக்கு தரமான நூற்றித் தொண்ணூற்றி இரண்டு(192) மிளகுகள் தேவை படும். முதல் நாள் ஒரு மிளகு, அடுத்த நாள் இரண்டு, அதற்கடுத்த நாள் மூன்று என ஒவ்வொரு எண்ணிக்கையாக ஏழு நாள் வரை வெறும் வாயிலிட்டு நன்கு மென்று விழுங்கிட வேண்டுமாம்.
பின்னர் எட்டாம் நாளில் இருந்து ஆறு மிளகு, ஒன்பதாம் நாள் ஐந்து மிளகு என குறைத்துக் கொண்டே பதின் மூன்றாம் நாள் ஒரு மிளகு ஆகும் வரை சாப்பிட வேண்டுமென்கிறார். பதின்நான்காம் நாள் மீண்டும் எண்ணிக்கையை உயர்த்தி இரண்டு மிளகு என தொடர வேண்டும். இப்படி தொடர்ந்து ஏழு ஏழு நாட்களாய் கூட்டிக் குறைத்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் மிளகை சாப்பிட்டு வர வேண்டுமாம்.

இப்படி ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் உடல் ஒளி பெறுவதுடன்,வலிமையும் அடையுமாம். மேலும் முக்கியமாய் ஆயுளும் அதிகரிக்கும் என்கிறார் தேரையர்.

எல்லாம் சரிதான், எப்படி உண்ண வேண்டும்?, இதில்தான் இந்த கற்பத்தின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

காலை அல்லது மாலை வேளைகளில் இந்த மிளகை உண்ணலாம் என்கிறார்.ஆனால் இதை சாப்பிடுவதற்கு ஒரு சாமம் அதாவது மூன்று மணி நேரத்துக்கு முன்னால் வரை உணவு உட்கொள்ளக் கூடாது என்கிறார். மேலும் பத்தியமாக “மது, மாது, மாமிசம்” விலக்கிட கூறுகிறார்.

எளிய கற்ப முறைதானே!

மேலும் மிளகை பொடியாக்கி தேனுடன் குழைத்து உட்கொண்டு வந்தால் குரல் இனிமையடையுமாம்.
சிட்டிகையளவு மிளகுப் பொடியுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து உட்கொண்டால் கடும்பசி ஏற்படுவதுடன் பித்தம் சார்பான நோய்களும் நீங்குமாம்.

மிளகைக் குடிநீராகக் காய்ச்சி பருகி வந்தால் முக்குற்றங்களாகிய வளி, அழல், ஐய நோய்களையும் மற்றும் பல கொடும் பிணிகளையும் தீர்க்குமாம் என்கிறார் தேரையர்.

குடி நீர் என்பது எட்டுப் பங்கு நீர் விட்டு ஒரு பங்காக காய்ச்சி எடுப்பதாகும்.

Popular Posts