சீந்தில் கொடி. ( TINOSPORA CARDIFOLIA)


மூலிகையின் பெயர் -: சீந்தில் கொடி.

வேறு பெயர்கள்- அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி சஞ்சீவி, ஆகாசவல்லி போன்றவை.

பயன் தரும் பாகங்கள் -: கொடி, இலை மற்றும் வேர்.


மருத்துவப்பயன்கள் -: முதிர்ந்த கொடியை நறுக்கி இடித்து நல்ல நீரில் கரைத்து வடிகட்டி அசையாது சில மணி நேரம் வைத்திருந்து நீரை வடித்துப் பார்க்க அடியில் வெண்ணிறமான மாவு படிந்திருக்கும். மீண்டும் நீர் விட்டுக் கரைத்து தெளிய வைத்து இறுத்து எடுத்து உலர்த்தி வைக்கப் பளிச்சிடும் வெண்ணிறப் பொடியாயிருக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப் படும். இது ஓர் கற்ப மருந்தாகக் கருதப்படுகிறது. உணவுக் கட்டுப் பாட்டுடன் நீண்ட நாள் சாப்பிட பல பிணிகளும் நீங்கும் என்பதாம்.

சீந்தில் உடற்பலம், சிறுநீர், காமம், தாய்ப்பால், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கும். முறை நோய் மஞ்சள் காமாலை, வாதம், கேன்சர், அல்சர், ஈரல் நோய் ஆகியவை தீர்க்கும், உடல் தேற்றும்.

சீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகியவைகளை உரம் பெறச் செய்யும். பிற மருந்தின் சேர்கையுடன் நீரிழிவு, காமாலை, பாண்டு, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, காய்ச்சல்,மூர்ச்சை ஆகியவற்றைத் தீர்க்கலாம்.

சீந்தில் கொடி, நெற்பொறி வகைக்கு 50 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 150 மில்லியாக வற்றக் காய்ச்சிக் காலை, மதியம், மாலையாக 50 மி.லி. யாகக் குடித்து வர மேக வெப்பம், தாகம் தீரும்.

முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்து காலை, மாலை அரைத் தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும். பனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால் அசதி, மிகுதாகம், உடல் மெலிவு, விரல்களில் சுருக் சுருக்கென்று குத்துதல் ஆகியவை தீரும்.

மூலிகைகளின் பயன்களை இன்று உலகம் உணரத் தெடங்கிவிட்டது. மூலிகைகளின் ஆராய்ச்சி இன்று எங்குபார்த்தாலும் நடைபெறுகிறது. மூலிகைகளின் ஸ்வர்க பூமியான நம் இந்தியா மூலிகை ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில்தான் உள்ளது. ஆனால் சீனாவோ மூலிகை ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் தவப்பயனால் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து மக்களுக்கு மருத்துவத்தை செய்து வந்தனர். இடைப்பட்ட காலத்தில் இந்த மூலிகைகளின் பயன்களை அறியாமல் மக்கள் ஆங்கில மருத்துவம் நோக்கி  சென்றதால் மூலிகைகளைப் பற்றி ஒரு சந்ததியினர் அறிய முடியாமல் போனது . ஆனால் மேலை நாட்டினர் இந்த மூலிகைகளின் மருத்துவக் குணங்களை நம் ஏட்டுச் சுவடிகள் மூலம் கண்டறிந்து பயன்படுத்தி மட்டுமல்லாது காப்புரிமையையும் பெற்றுள்ளனர்.

 அமிர்தவல்லி என்ற சீந்திலின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொள்வோம்

இது கொடி இனத்தை  சேர்ந்தது. மலை அடிவாரங்களில் அதிகம் காணப்படும். இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா, தாய்லாந்து போன்ற  நாடுகளில் ஏராளமாக வளருகின்றன.

1) சீந்தில், 2) பொற் சீந்தில் , 3) பேய்ச்சீந்தில்

இதில் பேய்ச்சீந்தில் என்பது ஆகாசக் கருடன் எனப்படுகின்றது.

ஆறாத புண்கள் ஆற

இதன் இலைகளை அனலில் வாட்டி அதன் சாற்றை புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும். சீந்திலின் முற்றிய கொடியெ  அதிக மருத்துவப் பயன்கள் கொண்டுள்ளது

புகலுஞ் சீந்திற் பற்படகம் பூசுஞ் சந்தம் விலாமிச்சந்
திகழ்வேர்க் கொம்பு மிருவேலி சிற்றாமுட்டியுடன் காசுந்
தகவே யொவ்வொன் றோர்கழஞ்சு தண்ணீ ரிரண்டு நாழியிட்டுச்
சுகமாய்க் காய்ச்சிக் கொடுத்தற்காற் சேரும் பித்தஞ் சுரந்தானே
(குணபாடம்)

சீந்தில் கொடி - 10 கிராம்

பற்படகம் - 10 கிராம்

சந்தனம் - 10 கிராம்

விலாமிச்சவேர் - 10 கிராம்

சுக்கு - 10 கிராம்

வெட்டிவேர் - 10 கிராம்

சிற்றாமுட்டி - 10 கிராம்

கோரை  கிழங்கு - 10 கிராம்

இவற்றை எடுத்து அரைத்து 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்  குணமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு

நீரிழிவு நோயாளிகளுக்கு சீந்தில் கொடி அருமருந்தாகும். இந்த மதுமேக நோய்க்கு அப்போதே தேரையர் தன் வெண்பாவில்

மேகமெனு மாதபத்தால் வெந்த புயிர்ப்பயிரைத்
தாக மடங்கத் தணித்தலால் - ஆகம்
அமர ரெனலிருக்க வாதரித்த லாலே
அமுதவல்லி சஞ்சீவி யாம்.

சீந்தில் கொடியை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தினமும் காலை மாலை அருந்திவந்தால் உடலில் உள்ள சர்க்கரை சீராகி இந்நோயின் தாக்கம் குறையும்.

சீந்தில் கொடி - 34 கிராம்

கொத்துமல்லி - 4 கிராம்

அதிமதுரம் - 4 கிராம்

சோம்பு - 4 கிராம்

பன்னீர் பூ - 4 கிராம்

எடுத்து 300 மிலி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இரண்டு மணி நேரம் ஆறவைத்து பின்பு வடிகட்டி நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் 25 மிலி முதல் 30 மிலி வீதம் அருந்தி வந்தால் உப்பிசம், நாள்பட்ட செரிமானமின்மை, வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

சீந்தில் கொடியைக் கொண்டு சீந்தில் எண்ணெய், சீந்தில் நெய் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
இதிலிருந்து எடுக்கப்படும் ஒருவகையான உப்புக்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர்.

குட்டம் பதினெட்டும் குஞ்சரத்தின் றோற்சொறியுங்
கட்டம் பெரிதாங் கயநோயும் - பட்டவுடன்
செந்தீமுன் பஞ்செனவே சீத்தலுப் போடளைத்த
தந்தா வளநீர்க்குச் சாம்
(தேரன் வெண்பா)

இந்த சீந்தில் சர்க்கரையானது பதினொரு வகையான நோய்களை குணப்படுத்தும். யானைத் தோல் போன்ற சொறியும், கொடிய கபப் பிணிகளையும் போக்கும் குணமுண்டு.

பசியைத் தூண்ட

சீந்திற் கிழங்கருந்தக் தீபனமாம் மேகவகை
போந்தவுதி ரப்பிதம் பொஞ்குசுர-மாந்தம்
அதிசாரம் வெய்யகணம் ஆம்பலநோ யோடே
கதிவிடமுங் கெட்டு விடுங் காண்
(அகத்தியர் குணபாடம்)

சீந்தில் கிழங்கை பொடி செய்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இரத்த சோகையைப் போக்கும். சுரம், மாந்தம் போன்றவற்றை நீக்கும்.

சீந்தில் என்பது கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. இதற்கு அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி என வேறு பெயர்களும் உண்டு. இவற்றில் சீந்தில், பொற்சீந்தில், பேய்ச்சீந்தில் என மூன்று வகைகள் உள்ளது. இந்த காய கற்பத்திற்கு பொற்சீந்தில் சிறப்பானது.


தானென்ற பொற்சீந்தி யானால்நன்று

சாதகமாய் சிவப்புநன்று கிடையாவிட்டால்

பானென்ற சீந்திமேற் றோலுபோக்கி

பருந்துண்டாய்க் கொண்டுவந்துக் கிழித்துப்போட்டு

கோனென்ற நிழலுலர்த்திச் சூரணித்து

கூரான சர்க்கரைதான் சரியாய்ச் சேர்த்து

வேனென்ற வெருகடிதூள் அந்திசந்தி

வெருளாதே மண்டல முண்டுபாரே.


பாரப்பா மேகமென்றே தெல்லாம் போகும்

பருவான வாதபித்தம் பக்கவமுமாகும்

சேரப்பா கபாலத்தில் வெட்டைபோகும்

செகமறிய அஸ்திசுரம் மேகம்போகும்

சாரப்பா தாதுமுத்தும் தழைக்குந்திரேகம்

சதுரான ஆறுதலம் வன்னிமீறும்

போமப்பா சீந்திக்குச் சாவுமில்லை

பேரின்ப சாஸ்திரத்தைப் பேணிப்பாரே.

பொற்சீந்தில் கொடி கிடைத்தால் மிகவும் சிறப்பானது. அது அது கிடைக்காத பட்சத்தில், நல்ல சீந்தில் கொடியின் தடித்த தண்டினைத் தேர்வு செய்து அதன் மேற் தோலை உரித்து நீக்கி, சிறு சிறு சிறு துண்டுகளாக கிழித்துப் போட்டு, நிழலில் காயவைத்து சூரணமாக செய்து, பின்னர் அதனுடன் சம அளவில் சர்க்கரை சேர்த்துக் கலந்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

பின்னர் தினமும் அந்த சூரணத்தில் வெருகடி அளவு எடுத்து, தினமும் காலை மாலை என இரு வேளைகள் வீதம்  ஒரு மண்டலத்திற்கு உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ச்சியாக ஒரு மண்டலம் உண்டு வந்தால் மேகம், வாதபித்தம், கபால வெட்டை, அத்திசுரம், ஆகியவை நீங்குவதுடன், தாது விருத்தியும், உடல் பலமும் உண்டாவதுடன் காயசித்தியும் கைகூடும் என்கிறார்.

இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொலலப்படவில்லை.

சட்டைமுனி கற்பவிதி" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

இந்த காயகற்பத்திற்கு சீந்தில் கற்பம் என்றொரு பெயரும் உண்டு.


சொல்லுகிறேன் பொற்சீந்தி யானால் நன்று
துலங்காது கிடைக்காவிட்டால் நல்லசீந்தி
அல்லலுற்நேறார் மேற்றோலை யுரித்துப் போடு
யுடித்தண்டாய்க் கொண்டுவந்து கிழித்துப்போட்டு
நல்லுறவே யுலர்ந்தபின்பு இடித்துத்தூளாய்
நலமாக நாலிலொன்று சர்க்கரையுங் கூட்டி
ஒல்லுறவே தினந்தோறுங் கழஞ்சிகொள்ளு
ஓராத மண்டலமு முண்டுதேறே.

சேரப்பா சுரதோச மெல்லாமாம் போகுஞ்
செமறிய மேகமென்ற தெல்லாம் போகும்
வாறப்பா கபாலத்தில் வெடம்டை போகும்
வற்றி நின்ற தாதுவெல்லா மருவியூரும்
வேறப்பா அஸ்திசுரம் வெட்டை போகும்
மெய்நிறைந்த நாடியெல்லா மமுர்தமாகும்
பேரப்பா சீந்திச்சார் வேறே யில்லைப்
பேரே அமுர்தசஞ் சீவிகற் பமாமே.

பொற்சீந்தில் கொடி கிடைத்தால் மிகவும் சிறப்பானது. எனினும் அது அது கிடைக்காத பட்சத்தில் நல்ல சீந்தில் கொடியின் அடித் தண்டினைத் தேர்வு செய்து அதன் மேல்தோலை உரித்து நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு காயவைத்து சூரணமாக செய்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

பின்னர் தினமும் அந்த சூரணத்தில் கழஞ்சி அளவு எடுத்து, அதற்கு நான்கில் ஒரு பங்கு சர்க்கரை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ச்சியாக ஒரு மண்டலம் உண்டால் சுரதோஷங்கள் , மேகம், கபால வெட்டை, அத்திசுரம், வெட்டை ஆகியவை நீங்குவதுடன், தாது விருத்தியும், நாடியமிர்தமும் உண்டாவதுடன் காயசித்தியும் கைகூடும் என்கிறார்.


இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொலலப்படவில்லை.

Popular Posts