
மலைச்சரிவுகளிலும், சிலவகைப் பூமியிலும் அதிகம் கிடைக்கிறது. சீயக்காய் போன்று சிகையிலுள்ள அழுக்கைப் போக்கிவிடும். வடிவத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கும். இச்செடியானது மத்திய இந்தியா, தென்னிந்தியா, ஸ்ரீலங்கா போன்ற இடங்களில் ஏராளமாக வளரும் குத்துச் செடி. இதன் இலை, பூ, வேர், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.
இது பெருஞ்செடி வகையைச் சேர்ந்தது. இது செம்மண் பூமியில் தான் அதிக அளவில் பயிராகிறது. பெருஞ்செடியாக அடர்ந்து வளரும். முட்டை வடிவத்தில் குண்டு குண்டாக மொக்குகள் விட்டு பெரிய இதழுடன் மஞ்சள் நிறப் பூக்களுடன் காணப்படும். மழைக் காலத்தில் செழிப்பாகவும், கோடைகாலத்தில் செழுமை குன்றியும் காணப்படும். இலை அகத்திக் கீரையை ஒத்த வடிவத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கும்.
ஆவாரஞ் செடியின் பட்டை தோல் பதனிட அதிக அளவில் பயன்பட்டு வருகிறது. மந்தமான கண் தெளிவடையும். மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும். ஆவாரம் பூவின் இதழ்களை ஆய்ந்து எடுத்து பச்சைப் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து சமைத்து தொடர்ந்து 40 நாள் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர உடலில் நல்ல பலம் பெறும்.
உடல் சூட்டை ஆவாரம் பூ தணிக்கக் கூடியது. பூவுடன் பாசிப்பயிறு சேர்த்து அரைத்து உடம்பிற்குத் தேய்த்துக் குளிக்கலாம். உடலிலுள்ள அரிப்பு நீங்க நன் மருந்து. ஆவாரைக்கு ‘தங்க மங்கை’ என்ற சிற்ப்புப் பெயருண்டு. இதில் தங்க பஸ்பம் செய்வார்கள்.
வைத்தியத் துறையில் இதன் எல்லா பாகங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உடலிலுள்ள துர்நீரை இறக்கி சிறு நீராக சுரக்கச் செய்து நீரை வெளியேற்றுகிறது. நரம்பு தளர்ச்சியை நீக்கி, வலிமையைக் கொடுக்கிறது.
ஆவாரம்பூவை நெய்யில் வதக்கி உட்கொண்டு வர உடலில் மறைந்திருக்கும் பல வியாதிகள் அகன்று விடும். பூவை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை, வெட்டை, மேக நோய்கள், சோர்வு, நாவறட்சி, உடல் வறட்சி நீங்கும். ஆவாரம் பூவுடன் நாவல் மர இலையை சேர்த்துப் பொடியாக்கி பசும்பாலில் கலக்கிக் குடித்துவர சர்க்கரை வியாதி விலகி விடும். நாவல் இலைக்குப் பதில் வில்வ இலையையும் சேர்க்கலாம்.
ஆவாரம் பூவுக்கு உடலைப் பொலிவுடன் அமைக்கும் சக்தி உண்டு. விருப்பம் போல பக்குவம் செய்து, இதனை உணவோடு சேர்த்துக் கொண்டால் உடலில் நல்ல தளதளப்பும், சாந்தியும் ஏற்படும்.
பூவுடன் பச்சைப் பயிறு சேர்த்தரைத்து நமைச்சலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். இலைகள் குளிர்ச்சியுடையது. வெயிலில் வெகு தூரம் நடப்பவர்கள், இந்த இலையை தலையின் மீது பரப்பி அதன்மீது தலைப்பாகை கட்டி நடப்பார்கள். வெயிலின் வெப்பம் பாதிக்காது. நடையும் சுறுசுறுப்புடன் தோன்றும்.
ஆவாரைப் பிசின் நிரிழிவு, வெள்ளைப்படுதல் முதலிய சிறுநீர் கேடுகளைப் போக்கும். இலை குளிர்ச்சியுடையமையால், வெயிலில் வெகுதூரம் நடப்பவர்கள் இவ்விலைகளைத் தலையின் மீது பரப்பி அதன்மீது தலைப்பாகையிட்டு நடக்க வெயிலின் கடுமை தாக்காது. பூவைச் சமைத்துச் சாப்பிட, கற்றாழை மணம், நீரிழிவு, நீர் வேட்கை சமனப்படும்.
விதையின் தோலைப் போக்கி, நுண்ணியதாகப் பொடிசெய்து கண்ணில் தூவியாவது அல்லது தேங்காய் எண்ணெயில் குழைத்து கண்ணோய்க்கு இடல் வழக்கு. இதனால் சீழ்பிடிக்கும் கண்ணோய் தீரும்.
வேரை குடிநீரிலிட்டுச் சாப்பிட்டுவர நீரிழிவு, ஆண்குறி எரிச்சல் தணியும். வேண்டுமானால் இத்துடன் கற்கண்டு, பசுவின் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆவாரை வேர்ப்பட்டையை கஷாயஞ் செய்து அதற்கு நேர் வெள்ளாட்டுப் பால் அல்லது பசுவின் பால், எண்ணெய் இவற்றைக் கூட்டித் தைலம் செய்து தலைமுழுகி வர, உடல் வெப்பந் தணியும், கண் குளிரும்.
ஆவாரந்துளிர், கல்மதம், கொன்றைவேர் ஆகிய மூன்றையும் புளித்த மோரில் கலக்கிக் குடிக்க நீரிழிவு நோய் நீங்கும். ஆவாரம், சீந்தில், தில்லைச்செடி இவைகளின் வேர், இலை, தண்டு, பூ முதலியவற்றை முறையே மூன்று, இரண்டு, ஒன்று எனும் எடையாகக் கொண்டு, இளவறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்துப் பொடியாக்கி அரைப்படிக்கு அரைப்படி நீரிட்டு, அரைக்கால் படியாகக் குடிநீர் செய்து அதில் பால் கூட்டி காலை, மாலை கொடுக்க நீரிழிவு போகும். நீரில் சர்க்கரை அளவும் குறையும்.