கக்குவான் இருமல் குணமாக நஞ்சறுப்பான் (Tylophorqosthmatice or Asciepiadaceae)


எதிர் அடுக்குகளில் முட்டை வடிவ இலைகளைக் கொண்ட சிறிய பூங்கொத்துக்களை உடைய வேலிகளில் படரும் சுற்றுக்கொடி இனம் நஞ்சறுப்பான். பஞ்சுடன் கூடிய முட்டை வடிவ விதைகளைக் கொண்டு இருக்கும். வேர், இலை மருத்துவக் குணம் உடையது. வாந்தியை ஏற்படுத்தும், வியர்வையை அதிகமாக்கும், கோழையை அகற்றும் குணம்கொண்டது. தமிழகமெங்கும் எல்லா மண்வளத்திலும் வேலிகளில் தானாகவே வளரக்கூடியது.
வேறுபெயர்கள் : கொடிப்பாலை, கறிப்பாலை, நஞ்சுமுறிச்சான் கொடி, கொண்ணி.
ஆங்கிலப்பெயர்: Tylophorqosthmatice; W&A; Asciepiadaceae
மருத்துவ குணங்கள் : நஞ்சறுப்பான் இலையை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து வெந்நீரில் 3 வேளைக்கு சாப்பிட வியர்வை பெருகும். சளியைப் போக்கும். சீதக்கழிச்சல், நீர்த்தக்கழிச்சல் குணமாகும்.
நஞ்சறுப்பான் இலைச்சூரணம் 150 மில்லியளவு எடுத்து தேனில் கலந்து இரண்டு வேளை கொடுத்துவர குழந்தைகளுக்குக் காணும் கக்குவான் இருமல் குணமாகும்.
நஞ்சறுப்பான் இலை, நொச்சி, தைல இலை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைக்கனம், தலைவலி, உடல்கனம், இருமல், சளி, இளைப்பு குணமாகும்.
நஞ்சறுப்பான் இலையை அரைத்து எலுமிச்சம்பழம் அளவு சாப்பிடக்கொடுத்து, கடிவாயிலும் வைத்துக்கட்ட வாந்தியாகி எந்தவிதமான நஞ்சும் முறியும் (மயக்க நிலையில் இருந்தால் நஞ்சறுப்பான் வேர்ப்பொடியை கொடுக்கலாம்.)
நஞ்சறுப்பான் சமூலத்தை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதே அளவு மிளகுப்பொடி கலந்து 5 கிராமாக 2 வேளை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்துவர பாதரசம், ரசக்கற்பூரம், சவ்வீரம் போன்ற பாசாணங்களின் வீறு தணியும். உப்பில்லாத மோர் உணவு சாப்பிட வேண்டும். இதே பொடியை அரை கிராம் அளவிற்கு 3 வேளையாகத் தொடர்ந்து சாப்பிட்டுவர மேக வாய்வுப் பிடிப்புகள் குணமாகும்.
நஞ்சறுப்பான் பூண்டை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து அரைலிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி தலைமுழுகிவர மண்டைக்குத்தல் குணமாகும்.

Popular Posts